Tuesday, April 17, 2018

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 183 (17.04.18)


எம்.ஆனந்த், கோவை.

கேள்வி :

2016-ம் ஆண்டு பொறியியல் படித்து முடித்தேன். குறைவான சம்பளத்தில் வேலை செய்கிறேன். நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாம் என்று இருக்கிறேன். வியாபாரம் எனக்கு ஒத்து வருமா? அல்லது தொழில்தானா? எப்போது நிரந்தர வேலை அமையும்?


பதில் :


கேது

சந்

செவ்

சனி

30-8-1994, மாலை
4.15,
கோவை


சூ, பு
குரு
ரா

சுக்

(மகர லக்னம், ரிஷப ராசி. 2-ல் சனி. 4-ல் கேது. 5-ல் சந். 6-ல் செவ். 8-ல் சூரி, புத. 9-ல் சுக். 10-ல் குரு, ராகு. 30-8-1994, மாலை 4.15, கோவை)

கல்லூரியில் படித்திருக்கும் உனது தமிழ்க் கடிதத்தை படித்ததும் “மெல்ல தமிழ் இனிச் சாகும்” என்ற கொடுமையான வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன. நான்கு வரியைக் கூட பிழையில்லாமல் தமிழில் எழுதத் தெரியாமல் கல்லூரிப் படிப்பையும் முடித்திருக்கிறாய் நீ. கேட்டால் ஆங்கில வழியில் படித்தேன் என்று சொல்வாய். பிறந்த ஊரிலேயே நம் தாய்மொழியின் நிலை இதுதான்
ஜாதகப்படி பத்துக்குடையவன் நீசமானாலும் வர்க்கோத்த அமைப்பில் உள்ளதால் உன்னால் சொந்தத்தொழில் திறம்பட செய்ய முடியும். ஏழாம் அதிபதி உச்சமாகி கூட்டாளிகளைக் குறிக்கும் ஏழாம்பாவம் பலவீனமாக இல்லாததால் உனக்கு கூட்டுத் தொழிலும் ஒத்து வரும். ஆனால் உன் ரிஷபராசிக்கு தற்போது அஷ்டமச்சனி நடந்து வருவதால் இன்னும் ஒன்றரை வருடங்கள் பொறுமையாக இரு. அதன்பிறகு தொழில், வேலைரீதியாக நீ செய்யும் அத்தனை முயற்சிகளும் பலித்து நிரந்தமான அமைப்பில் இருப்பாய். வாழ்த்துக்கள்.

ரா.வெங்கடசுப்பிரமணியன், திருவைகுண்டம்.

கேள்வி :

குருஜி அய்யா அவர்களின் பாதம் பணிகிறேன். பத்தாம் பாவகம் பகல் உச்சிப் பொழுதென்றும், அதனால் அங்கு சூரியன் திக்பலம் என்றும், நான்காம் பாவகம் நள்ளிரவு நேரம் என்றும் அதனால் அங்கு சந்திரன் திக்பலம் பெறுகிறார் என்றும் படித்திருக்கிறேன். பத்தாம் வீடு ஏன் பகலையும், நான்காம் வீடு ஏன் நள்ளிரவையும் குறிக்கிறது? சூரியனிடம் இருந்து ஐந்து முதல் ஒன்பதுவரை உள்ள கிரகங்கள் வக்ரம் பெறுகிறது என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள். ஆனால் சுக்கிரன் சூரியனிடம் இருந்து விலகி எப்படி 5, 6, 7, 8 ராசிக்குப் போகும்? சுக்கிரன் எப்படி வக்ரம் அடைகிறது என்று விளக்கம் தாருங்கள்.

பதில் :

நீங்கள் கேட்கிற இந்தக் கேள்விக்கு விரிவான விளக்கம்தான் தர முடியும். ஆனால் இது மாலைமலர் வாசகர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு பதில் தர ஒதுக்கப்பட்ட பகுதி. கடந்த இரண்டு வாரங்களாக மாலைமலரில் மீண்டும் நான் புதிதாக எழுத ஆரம்பித்திருக்கும் “ஜோதிடம் எனும் மகா அற்புதம்” என்ற தொடர் வெள்ளிக்கிழமைகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. நீங்கள் கேட்கும் விளக்கங்களை அதில் தருகிறேன்.

டி.சிவபிரசாத், திருவனந்தபுரம்.

கேள்வி :

39 வயதாகியும் நிலையான வேலையும் திருமணமும் இல்லை. நானும், 87 வயதான அப்பாவும் மட்டும் தனியாக வசித்து வருகிறோம். கேரளா போக்குவரத்து கழகத்தில் தற்காலிகமாக வேலை செய்தேன். அதுவும் சென்ற வருடம் போய் விட்டது. மீண்டும் நிரந்தர வேலை கிடைக்குமா? எனது ஜாதகத்தில் நீசபங்க ராஜயோகம் இருக்கிறதா? திருமணம் எப்போது நடக்கும்?

பதில் :

பு,சுக்
செவ்
சந்,
சூ


கேது

27-4-1979,
காலை
10.40, திருவனந்தபுரம்

குரு
சனி
ரா

(மிதுன லக்னம், மேஷ ராசி. 2-ல் குரு. 3-ல் சனி, ராகு. 9-ல் கேது. 10-ல் புத, சுக், செவ். 11-ல் சூரி, சந். 27-4-1979, காலை 10.40, திருவனந்தபுரம்.)

லக்னாதிபதி நீசமாகி வலுவிழந்தாலே ஒருவரின் வாழ்க்கையின் முற்பகுதி சரியில்லாமல் இருந்து அந்தக் கிரகம் நீசபங்கமாக இருந்தால் பிற்பகுதி வாழ்க்கை ஓரளவிற்கு யோகமாக இருக்கும். ஆனால் நீசபங்கம், ராஜயோகமாக மாறுவதற்கு ஏராளமான விதிகள் இருக்கின்றன. அதைவிட மேலாக சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசை வர வேண்டியதும் மிக முக்கியம்.
உங்கள் ஜாதக அமைப்பின்படி லக்னாதிபதி புதன் உச்ச சுக்கிரனின் இணைவாலும், அவருக்கு வீடு கொடுத்த குருவின் உச்சத்தாலும் நீசபங்கமாகி இருக்கிறார். ஆனால் இது போன்ற அமைப்பில் ஒரு நீசகிரகம் சந்திர கேந்திரத்தில் இருக்க வேண்டியது அவசியம். அரசாங்கத்தில் நிரந்தமாக வேலை செய்வதற்கு சூரிய வலுவும், சிம்மத்தின் பலமும் வேண்டும். உங்களுக்கு சூரியன் உச்சமாக இருந்தாலும் சிம்மத்தில் சனி, ராகு இருப்பதால் அரசாங்கம் சம்பந்தப்பட்ட தற்காலிக அமைப்புதான் கிடைக்கும்.
40 வயதிற்கு மேல் யோகத்துடன் வாழக்கூடிய ஜாதகம் உங்களுடையது. 10-ல் செவ்வாய் இரண்டு சுபக்கிரக சம்பந்தத்துடன் இருப்பதால் உங்களுக்கு நெருப்பு சம்பந்தமான தொழில்கள் கை கொடுக்கும். எனவே அதுபோன்ற தொழிலில் பிழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடப்பதால் இந்த வருட இறுதிக்குள் திருமணம் நடக்கும். அதற்கான முழு முயற்சிகளை செய்யுங்கள். புதனுக்குரிய முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள்.

மு.பக்தவத்சலம், சேலம்.

கேள்வி :

மகன் மற்றும் வருங்கால மருமகள் ஜாதகங்களை அனுப்பி உள்ளேன். வரும் ஜூன் 10-ந்தேதி இவர்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. மகனுக்கு கோபம் அதிகமாக வருகிறது. இவன் அதிகமாக தமிழ்மொழி, தமிழர்கள் மீது பற்றுடையவன். இங்குதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. ஏழரைச்சனி முதல் எல்லாவற்றிலும் தமிழ் இருக்க வேண்டும் என்கிறான். பொருள் கூட தமிழர்கள் கடையில்தான் வாங்க வேண்டும் என்கிறான். இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை வருகிறது. இவனுக்கு இந்தி என்றாலே பிடிக்காது. வருங்கால மருமகள் இந்தி நாடகங்கள் பார்ப்பேன் என்று கூறியதற்கு அவளிடம் சண்டைக்கு போகிறான். இவனை எப்படி திருத்துவது? இவனது எதிர்காலம் எப்படி?

பதில் :



குரு

4-11-1989, மாலை
4.10,
சேலம்

கேது

ரா
சந்,சு
சனி
சூ,பு
செவ்


சந்


கே

13-1-1992, மதியம்
2.35, கோவை.

சனி

குரு
சூ,பு
செ,ரா

(ஆண்: 4-11-1989, மாலை 4.10, சேலம். பெண்: 13-1-1992, மதியம் 2.35, கோவை.)

ஜாதகப்படி உங்கள் மகன் கோபக்காரன் அல்ல. இந்த வயதிற்கே உரிய சாதாரண துடுக்குத்தனம்தான் அது. ஏழரைச்சனி நடப்பதால் இளமைக்கே உரிய இயலாத்தனத்தால் கோபம் வருகிறது. மருமகளின் கழுத்தில் தாலி ஏறியதும் இவன் மூக்கில் மூக்கணாங்கயிறு மாட்டப்பட்டுவிடும். மகனைப் பற்றிக் கவலைப்படும்படி ஜாதகப்படி ஏதும் இல்லை.

மகன், வருங்கால மருமகள் இருவரின் ஜாதகத்திலும் ஆறு கிரகங்களை குரு பார்ப்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக மருமகளின் ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் லக்னத்தை பார்த்த நிலையில், ராசியைக் குரு பார்ப்பதால் பொறுப்பான நல்ல பெண்ணாகவே இருப்பாள். கூடுதலாக குருவும், சூரியனும் பரிவர்த்தனை அடைந்து அவளுக்கு சூரியதசை இனி நடக்க இருப்பதாலும் திருமணத்திற்கு பின் இருவரும் முன்னேற்றத்துடன் இருப்பார்கள்.

பதினொன்றாம் வீட்டில் சுபத்துவத்துடன் இருக்கும் ராகுவின் தசை இன்னும் சில மாதங்களில் மகனுக்கு ஆரம்பிக்க இருப்பதால் மகனின் அனைத்து நடவடிக்கைகளிலும் இனிமேல் மாற்றம் வரும். ராகு என்பது இருக்கும் நிலையை மாற்றும் கிரகம் என்பதால் தற்போது அவர் கொண்டிருக்கும் தமிழ்மொழிக் கொள்கைகளையும் இனி மாற்றிக் கொள்வார்.

ஏழரைச்சனி நடப்பில் இருப்பதால் சொந்தத் தொழில் முயற்சிகள் இன்னும் இரண்டு வருடங்களுக்கு வேண்டாம். மகன் ஜாதகப்படி பத்தாமிடத்தில் சுபத்துவமான சனி இருப்பதால் மெக்கானிசம் சம்பந்தப்பட்ட துறைகளில் ஆர்வம் இருக்கும். அது சம்பந்தமான தொழிலை இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து வைத்து கொடுங்கள். நிச்சயமாக முன்னேறுவார். ஜாதகப்படி மணமக்கள் இருவரும் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்வார்கள். வாழ்த்துக்கள்.

எல்.பெலிக்ஸ் ரெஜினால்டு, கோவை-18.

கேள்வி :

மூன்று வருடங்களாக மிகவும் சிரமப்படுகிறேன். அய்யா அவர்களின் வாக்கை தெய்வ வாக்காக எதிர்பார்க்கிறேன். ஏழரைச்சனி முடிவுக்கு பிறகும் இதுநாள் வரை பாதிப்புகள் விலகும் அறிகுறி தெரியவில்லை. கடன் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. வாழ்வின் விளிம்பில் உள்ளேன். மூன்று வருடங்களுக்கு முன்பு சம்பந்தமோ, ஆதாரமோ இல்லாமல் என் மீது பதியப்பட்ட வழக்கு எப்போது முடியும்? பிரச்சினைகள் தீரும் நாளையும், அதுபற்றிய தங்களின் அறிவுரை மற்றும் ஆசிகளையும் வேண்டுகிறேன்.

பதில் :


ராகு
சுக்
சனி

சூ, பு

30-5-1969, காலை
11.40, கோவை


செவ்

சந்
குரு
கேது

(சிம்ம லக்னம், துலாம் ராசி. 2-ல் குரு, கேது. 3-ல் சந். 4-ல் செவ். 8-ல் ராகு. 9-ல் சுக், சனி. 10-ல் சூரி, புத. 30-5-1969, காலை 11.40, கோவை)

சிம்ம லக்னத்திற்கு ராகு-கேது தசைகள் நன்மைகளைச் செய்யாது. அப்படி நன்மை செய்ய வேண்டுமெனில் அவைகள் ஒரு சிக்கலான அமைப்பில் இருக்க வேண்டும். உங்கள் ஜாதகப்படி கேது, குருவுடன் இணைந்து சுபத்துவமாகி இருந்தாலும், குரு இங்கே எட்டுக்குடையவனாகி எட்டாமிடத்தைத்தான் தொடர்பு கொள்கிறார். எனவே கடந்த 2013 முதல் ஆரம்பித்த கேது தசை அஷ்டமாதிபதி தசையாகி ஏழு வருடங்களுக்கு உங்களுக்கு எவ்வித நன்மைகளையும் தராது. கூடுதலாக கேது பிரச்சினைகளைத் தருவதோடு வாழ்க்கை என்பது எப்படிபட்டது என்பதையும் கற்றுத் தருவார்.

அடுத்த வருட இறுதியில் ஆரம்பிக்க இருக்கும் சுக்கிர தசை, ராசிநாதனின் தசை என்பதால் உங்களுக்கு நன்மைகளை செய்யும். சுக்கிரன், நீச சனியுடன் இணைந்து இருந்தாலும், பவுர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரனின் பார்வை பெற்று இருக்கிறார். வலுவிழந்த ஆறாம் அதிபதியுடன் சுக்கிரன் இணைந்துள்ளதால், சுக்கிர தசை சுயபுக்தியில் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும்.

மரணத்தைத் தரும் கிரக அமைப்பு எது?

பெ.சிதம்பரம், கிருஷ்ணகிரி.

கேள்வி :

வேதஜோதிடம் எனும் அமுதத்தை எங்களுக்கு திகட்டத் திகட்ட சுவைக்கக் கொடுக்கும் ஜோதிட சக்ரவர்த்திக்கு இந்த சீடனின் வணக்கம். சமீபத்தில் மறைந்த ஒரு ஆன்மீககுருவின் ஜாதகத்தை நீங்கள் உரைத்த ஜோதிட விதிகளின் மூலம் ஆராய்ந்தேன். அவரது ஜாதகத்தில் செவ்வாய் திக்பலம் பெற்று ஐந்து கிரகங்கள் வர்க்கோத்தமம் பெற்று இருக்கின்றன. சுக்கிரதசை, சந்திர புக்தியில் அவர் இறைவனடி சேர்ந்தார். மகர, கும்ப லக்னத்திற்கு சூரிய, சந்திரர்கள் அவயோகிகள் என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள். அதனால்தான் சந்திர புக்தியில் அவர் உயிர் பிரிந்ததா? உங்களது கட்டுரைகளை மட்டும் படித்து ஜோதிட அறிவை வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த எளியவனுக்கு அருள் கூர்ந்து விளக்கவும்.

பதில் :

ஒருவர் ஆன்மீக நிலையில் உயர்வடைய வேண்டுமெனில் லக்னம், ராசியோடு குரு, சனி, கேது ஆகியவை சுபத்துவமாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று சில வருடங்களுக்கு முன் வெளிவந்த “தெய்வ அருள் எப்போது கிடைக்கும்?” என்ற கட்டுரையில் எழுதி இருந்தேன்.
ஜதத்குரு அவர்களின் ஜாதகத்தில் மகர லக்னமாகி, 2-ல் சனி, சந்திரன். 6-ல் புதன், கேது. 10-ல் செவ்வாய், குரு உள்ளன. இந்த அமைப்பின்படி குருபகவான் தனது ஐந்தாம் பார்வையால் ராசி மற்றும் லக்னாதிபதி சனியையும், கேதுவையும் பார்க்கிறார். சனிக்கு குருவின் பார்வையோடு எட்டில் அமர்ந்த சுக்கிரனின் பார்வை கிடைப்பதாலும் சனி மிகைப்பட்ட சுபத்துவம் அடைகிறார்.
இதுபோன்ற அமைப்பின் மூலம் சனி அதி உன்னத ஆன்மீக நிலையைத் தருவார் என்பதை நான் “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளில் சனியின் சூட்சுமங்களை விளக்கும்போது குறிப்பிட்டிருக்கிறேன். 19 வயதிலேயே குருவின் தசை ஆரம்பித்துவிட்டதால் ஜகத்குரு அவர்கள் இளம் வயதிலேயே துறவி ஆனார்கள்.

ஒருவருடைய மரண அமைப்பை 2, 7, 8 மற்றும் 3, 12-ம் இடங்கள் குறித்துக் காட்டும். ஜகத்குரு அவர்கள் சித்தி அடைந்த போது அவருக்கு சுக்கிர தசையில் சந்திர புக்தி நடந்து கொண்டிருந்தது. சுப கிரகமும், பாப கிரகமும் தொடர்பு கொள்ளும்போது அந்த இடத்தில் அசுப கிரகம் சுபத்துவமும், சுபக்கோள் பாபத்துவமும் அடையும் என்பது விதி. அதன்படி சனியை சுக்கிரன் சுபத்துவப்படுத்தினாலும், சனியின் பார்வையால் சுக்கிரன் பாப அமைப்பைப் பெறுகிறார். மேலும் 2, 7 ம் அதிபதிகளான தேய்பிறைச் சந்திரனும், சனியும் இணைந்து பார்த்ததால் 8-ல் இருக்கும் சுக்கிரன் மாரகம் தரும் அமைப்பை பெற்றார். எனவே இங்கு சுக்கிரனின் தசையில் ஜகத்குரு அவர்கள் இறையுடன் கலந்தார்கள்.

No comments :

Post a Comment