Monday, 9 January 2017

குருஜியின் மாலைமலர் வார ராசி பலன்கள் (9.1.2017 - 15.1.2017)


மேஷம்:

மேஷராசிக்கு இந்த வாரம் கெடுதல்கள் எதையும் சொல்வதற்கு இல்லை. ஜனன ஜாதகப்படி சாதகமற்ற பலன்கள் சிலருக்கு நடந்து கொண்டிருந்தாலும் கோட்சார அமைப்பில் நன்மைகள் பெறக்கூடிய அமைப்பு இருப்பதால் கெடுதல்கள் குறைந்து நன்மைகள் உள்ள வாரமாக இது இருக்கும். அதேநேரம் வெளிமாநிலம் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பண விஷயங்களில் நெருக்கடியான நிலைகளும், சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு கொடுத்த கடன் திரும்பி வராமல் நெருக்கடியான சூழல்களும் இருக்கும்.

குடும்பாதிபதி சுக்கிரன் கேதுவுடன் இணைந்து பலவீனமாக இருப்பதால் ஆரம்பத்தில் கணவன் மனைவிக்குள் சிறிது பின்னடைவுகள் இருந்தாலும் வார இறுதியில் நன்மைகள் நடக்கும் வாரமாக இருக்கும். குடும்பத்தில் ஏற்படும் சிறிய கருத்து வேற்றுமைகளுக்கு விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிருங்கள். அடுத்தவருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகும் என்பதால் யாருக்கும் எதுவும் தருவதாக ப்ராமிஸ் செய்யும் முன் யோசிப்பது நல்லது.

குழந்தைகள் விஷயத்தில் மனச்சங்கடங்களோ செலவுகளோ இருக்கும். குலதெய்வ வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன்களை இந்த நேரங்களில் நிறைவேற்ற முடியும். தொழில் ஸ்தானம் வலுவாக இருப்பதால் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் பாதிக்கப்படாது. வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் நல்ல வாரம் இது.

ரிஷபம்:

ரிஷபராசிக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரம் இது. ரிஷபத்திற்கு இந்த வாரம் பின்னடைவுகள் மனவருத்தங்கள் எதுவும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. இதுவரை பணவரவுக்குத் தடையாக இருந்த அனைத்து விஷயங்களும் உடனே நீங்கும். வியாபார முன்னேற்றத்திற்காக கடன் கேட்டிருந்தவர்கள் உடனே கிடைக்கப்பெறுவீர்கள். எதிர்கால முன்னேற்றதிற்கான மாற்றங்கள் நடைபெறும். சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும்.

கணிதம், அக்கௌன்ட், மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள். குலதெய்வதரிசனம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவீர்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். மனைவி, நண்பர்கள் போன்ற வழியில் சந்தோஷமான நிகழ்ச்சிகளும், சுபகாரியங்களும் இருக்கும். குறிப்பிட்ட சிலர் இந்த வாரம் உல்லாசமாக இருப்பீர்கள். கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்.

குருபகவான் தயவால் வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் எந்தவித சிக்கலும் இன்றி நல்லபடியாக நடக்கும். குறிப்பிட்ட சில ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலைமாற்றம், தொழில்மாற்றம், வீடுமாற்றம் போன்றவைகள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் உண்டு. மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். கலைஞர்களுக்கு இது வசந்த காலம்.

மிதுனம்:

அடுத்தவருக்கு உதவி செய்து நீங்கள் நல்ல பெயர் எடுக்கும் வாரமாக இது இருக்கும். பிறருக்கு உதவிகள் செய்து அதன் மூலம் சந்தோசம் அடைவீர்கள். அம்மா வழியில் செலவுகள் இருக்கும். என்ன செலவு வந்தாலும் வருமானம் கண்டிப்பாக குறையாது. பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. சிலருக்கு தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம்.

அடுத்தவரின் தயவு மற்றும் ஆலோசனை இல்லாமல் தனது சொந்த அனுபவத்தில் முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும், சிக்கல்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலைமை மாறி வியாபாரம் சூடுபிடிக்கும். போட்டியாளர்கள் ஒழிவார்கள். புதிய கடை திறக்க முடியும். இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். கிளைகள் ஆரம்பிப்பீர்கள். சிலருக்கு புதிய வாகனம் அமையும்.

பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்கும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது நல்லது. ‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்’ என்ற பழமொழியை இந்த வாரம் மிதுன ராசிக்காரர்கள் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. சிறிய விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம். பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம்.

கடகம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் தனக்கு வலிமையான இடங்களில் இருப்பதால் இந்த வாரம் கடக ராசிக்காரர்களின் நல்ல வாரமாக இருக்கும். வார இறுதிநாட்களில் சந்திரன் சுப வலுப்பெறுவதால் நீங்கள் நீண்டகாலமாக செய்ய நினைத்திருக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்கால திட்டங்களை செயல்படுத்த இது நல்ல வாரம். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

இதுவரை நிறைவேறாமல் சாக்கு,போக்கு காட்டிக்கொண்டிருக்கும் அடிப்படை விஷயங்கள் அனைத்தும் மனம்போல நிறைவேறும். தேவைக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டாம். உடல் நலத்தில் இந்த வாரம் அக்கறை காட்டவேண்டி இருக்கும். யாரையும் நம்பி வாக்குறுதி கொடுக்க வேண்டாம். கிரெடிட்கார்டு இருக்கிறது என்று தேவை இல்லாததை வாங்கிவிட்டு சிக்கலில் மாட்டாதீர்கள். வார இறுதியில் கடன்கலக்கம் உண்டு.

யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அவர்களின் வாழ்க்கை லட்சியத்தை அடைவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் இந்த வாரம் இருக்கும். தொழில் விஷயங்களில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது தொழில் முன்னேற்றம் பெறுவதை காண்பீர்கள். அலுவலகங்களில் இதுவரை எதிர்ப்புகளையும், பின்னடைவுகளையும் சந்தித்தவர்கள் இனிமேல் உங்களுக்கு சாதகமான சூழல் அமைவதையும் பார்க்க முடியும்.

சிம்மம்:

ராசிக்கு சனிபார்வை இருந்து உங்களின் முயற்சிகளில் சிக்கலை ஏற்படுத்தி சங்கடங்களை கொடுத்துக் கொண்டிருந்தாலும் மற்ற அமைப்புகளால் ராசி புனிதமடைவதால் இந்த வாரம் கெடுபலன்கள் எதுவும் சிம்மத்திற்கு இல்லாத வாரமாக இருக்கும். அதேநேரத்தில் ராசியில் ராகு இருப்பதால் தேவையற்ற மனக்கலக்கங்களும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். எதிர்ப்புக்கள் தலைதூக்கும்.

குரு எட்டாமிடத்தைப் பார்ப்பதால் ஏதேனும் தவறாக நடந்து விடுமோ என்று கடைசி நிமிடம் வரை குழப்பத்தில் வைத்திருந்தே நல்லவை நடக்கும். சனியும் நான்கில் இருப்பதால் உங்கள் எதிரிகள் கை ஓங்குவது போலத் தெரிந்தாலும் இறுதியில் வெற்றி என்பது உங்கள் வசம்தான். தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். பாகப்பிரிவினை போன்ற பூர்வீக சொத்து பிரச்சனைகளை தள்ளி வையுங்கள்.

தொழில் இடங்களில் அன்னிய மத, இன, மொழி நண்பர்களால் உதவிகளும் சந்தோஷ விஷயங்களும் உள்ள வாரமாக இது இருக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள்.

கன்னி:

கன்னிக்கு இந்த வாரம் வீண் செலவுகளும், விரயங்களும் உள்ள வாரமாக இருக்கும். தேவையற்றவைகளில் பணஇழப்பு இருக்கும் என்பதால் ஒன்றுக்கு நான்கு முறை சிந்தித்து செலவு செலவு செய்வதும், கிரெடிட் கார்டை தொடாமல் இருப்பதும் நன்மைகளைத் தரும். இரும்பு, பெட்ரோல், பிளாஸ்டிக், வேஸ்ட்பேப்பர் போன்றவைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது நல்ல வாரம். எட்டுக்குடையவன் வலுப்பெறுவதால் சிலருக்கு திடீர் பணவரவு கிடைக்கும்.

வெகுநாட்களாக இழுபறியில் இருந்து வந்த ஒரு விஷயம் நல்லபடியாக முடிந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும். ரியல்எஸ்டேட் மற்றும் பில்டர்ஸ் தொழில் செய்பவர்களுக்கு இலாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இது சுமாரான காலகட்டம்தான். அரசு, தனியார்துறை ஊழியர்கள் மேலதிகாரிகளின் பேச்சை கேட்டு செயல்படுவது நல்லது. சட்டத்தை மீறி யாருக்கும் சலுகைகள் காட்டாதீர்கள். சாப்ட்வேர் போன்ற நுணுக்கமான துறைகளில் இருப்பவர்கள் நிதானமுடன் இருப்பது நல்லது.

ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு பெற்றோர் விஷயத்தில் மனக்கஷ்டங்கள் இருக்கலாம். எந்த ஒரு தாய் தகப்பனும் தான் பெற்ற குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்களே தவிர கஷ்டப்படவேண்டும் என்று நினைக்க மாட்டர்கள் என்பதைப் புரிந்து கொண்டால் பெற்றோர்களின் அருமை புரியும்.

துலாம்:

இந்த வாரம் துலாம் ராசிக்கு எதிர்பார்த்த பணவரவுகளையும் தொழில் முன்னேற்றங்களையும் தரும் என்பதால் ராசிநாதன் சிக்கல்கள் எதுவும் இல்லாத வாரம் இது. கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை. தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

பணவிஷயத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு. வியாபாரிகளுக்கு சுமாரான நன்மைகள் உண்டு. கலைஞர்களுக்கு முயற்சிகளுக்கு பின்புதான் நல்லவை நடக்கும். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு அலுவலகங்களில் நெருக்கடிகள் இருக்கும். பத்திரிக்கை துறையினருக்கு இது நல்ல வாரம்.

இதுவரை உங்களை புரிந்து கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்ல வாரம் இது.

விருச்சிகம்:

இன்னும் சில வாரங்களுக்கு ராசிநாதன் செவ்வாய் வலுப்பெற்ற நிலையில் சுபத்துவம் பெற்றிருப்பார் என்பதாலும் அதனையடுத்த சில வாரங்களுக்கு உச்ச சுக்கிரனுடன் இணைந்து நல்ல பலன்களைத் தருவார் என்பதாலும் ஏழரைச்சனியின் கெடுபலன்கள் இனிமேல் உங்களுக்கு நடக்காது. எனவே விருச்சிகராசிக்காரர்கள் தற்போது உங்களுக்கு நடந்து கொண்டிருக்கும் பின்னடைவான விஷயங்களை பெரிதாக எண்ணாமல் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை மட்டு மனதில் நிறுத்தி இனிமேல் முன்னேற்றப் பாதையில் நடை போடுவீர்கள்.

ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகுசிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். பொதுவாழ்வில் அக்கறையும், நேர்மையான எண்ணங்களையும் கொண்டவர்களான உங்களுக்கு இந்த வாரம் செலவுகள் அதிகமாக இருக்கும் என்று கிரக நிலைகள் காட்டுகின்றன. வயதான தந்தையைக் கொண்டவர்கள் அவரது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

பெண்கள் விஷயத்தில் செலவுகளும் மனம் வருத்தப்படும்படியான நிகழ்ச்சிகளும் நடக்கும் என்பதோடு இவற்றிற்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலம் விஷயத்தில் கவனமாக இருங்கள். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள்.

தனுசு:

இதுவரை வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு உடனடியாக நல்லவேலை கிடைக்கும். இருக்கும் வேலையில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அனைத்தும் ஓய்ந்து நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலுவலகத்தில் வீண் பேச்சுகளைத் தவிருங்கள். அவற்றால் தேவையற்ற விரோதங்கள் வரலாம்.

தேவையற்ற விஷயங்களுக்கு நீங்கள் கடன் வாங்கவோ அல்லது அடுத்தவருக்கு ஜாமீன் போட்டு அதனால் வரும் தொல்லைகளையோ அனுபவிக்கும் வாரமாக இருக்கும். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம். வியாபாரிகளுக்கு சில விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல வாரம்.

பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். கணவன், மனைவி உறவு அனுசரணையாக இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த வாரம் திருப்புமுனையாக அமையும்.

மகரம்:

எட்டில் இருக்கும் ராகுவும், செவ்வாயும் மகர ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையை லேசாக அசைத்துப் பார்க்கும் சம்பவங்களை நடத்தி வைக்கும் என்றாலும் ராசிநாதன் சனி பதினொன்றில் அமர்ந்து ராசியை பார்ப்பது கெடுபலன்களை தடுக்கும் அமைப்பு போல செயல்படும் என்பதால் மகரராசிக்கு குறைகள் எதுவும் சொல்ல முடியாத வாரம் இது. வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். வீண் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம்.

தனியார் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித்தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த வாரம் நல்லவாரம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இப்போது நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

முதல் திருமணம் கோணலாகி காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு அனைத்தும் இப்போது நல்லபடியாக ஒரு முடிவிற்கு வந்து தெளிவு பிறக்கும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள் இந்த வாரம் உருவாகும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் இருக்கும். பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு.

கும்பம்:

கும்பராசிக்கு பின்னடைவுகள் எதுவும் இல்லாத நல்ல வாரம்தான். கெடுபலன்கள் எதுவும் சொல்லுவதற்கு இல்லை. வரும் ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு உங்களுக்கு அனைத்திலும் நல்ல பலன்களே நடக்கும். கடன் பிரச்னைகள் எதுவும் இருக்காது. வீடு வாங்குவது விஷயமாக ஹவுசிங் லோன் வாங்க வேண்டியிருக்கும். தொழில் வியாபார வேலை இடங்களில் கூடவே சிரித்துப்பேசி உங்களை கவிழ்க்கப் பார்க்கும் எதிரிகள் உருவாவார்கள். எதிலும் கவனமாக இருங்கள்.

தந்தைவழியில் நல்ல சம்பவங்கள் இருக்கும். பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். கணவன், மனைவி உறவு சுமாராக இருக்கும்.

அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும். இதுவரை பிறரைச் சார்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இந்த வாரம் முதல் சுயமாக செயல்பட ஆரம்பிப்பீர்கள். குருபகவான் எட்டில் வலுப்பெற்று இருப்பதால் இந்த வாரம் சிலருக்கு அனைத்து விஷயங்களிலும் மாறுதல்கள் உள்ள வாரமாக இருக்கும். வேலை மாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் போன்றவைகள் இருக்கலாம்.

மீனம்:

செவ்வாயும், குருபகவானும் பலமாக இருப்பதால் ராசியும், தனஸ்தானமும் வலுப்பெறுகிறது. எனவே இந்தவாரம் குருவின் மஞ்சள் நிறத்தையும், செவ்வாயின் சிகப்பு நிறத்தையும் தொழில்களாக கொண்டவர்களின் சுபிட்ச வாரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும் என்பதால் மீன ராசிக்காரர்களின் யோகவாரம் இது. அடுத்தவர்களால் மரியாதையுடன் நடத்தப்படுவீர்கள். மற்றவர்கள் உங்களுக்கு அடிபணிவார்கள்.

வருமானம் நன்றாக இருக்கும். அடுத்தவரிடம் போய் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. இன்னும் சில வாரங்களுக்கு தர்மகர்மாதிபதிகள் நன்மை செய்யும் அமைப்பில் இருப்பதால் மீனராசிக்காரர்களுக்கு கெடுபலன் என்று நினைக்கும்படியான சம்பவங்கள் நடந்தாலும் முடிவில் அவை நன்மைகள் தரும் மாற்றத்திற்கான அமைப்பாக மாறும் என்பதால் மீனராசிக்காரர்கள் வெற்றிகளை காணும் வாரம் இது.

சிலருக்கு இந்தவாரம் நீண்டதூர பிரயாணங்களோ வடமாநில புனித யாத்திரை அல்லது புனிததரிசனங்கள் போன்றவைகளோ இருக்கும். எதிர்ப்புகளை சுலபமாக சமாளிப்பீர்கள். நண்பர்களைப் போல நடித்து துரோகம் செய்துகொண்டு இருந்தவர்களை இப்போது அடையாளம் காண்பீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் லாபம் உண்டு. இளையபருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும்.

No comments :

Post a Comment